Blogs

image
  • Share:
Pattinathar
11 Mar 2022

"கொடுத்தால் விளையும், எடுத்தால் அழியும்!!" என்னும் தாரக மந்திரத்தோடு வாழ்ந்து, சிவ ஞானம் பெற்று, துறவிகளுக்கே இலக்கணமாக திகழ்ந்தவர் நமது பட்டினத்து செட்டியார் - “பட்டினத்தார்” என்று அன்போடு அழைக்கப்படும் சித்தர். பட்டினத்தார் பிறந்த ஊர்  காவிரிப்பூம்பட்டினம். காவேரி புகுந்து கடலில் சேர்வதால் ‘காவிரி புகும் பட்டினம்’ என்று  அழைக்க பெற்று, பின் நாளில் காவிரிப்பூம்பட்டினம் என்று மாறி, இன்று பூம்புகார் என்று வழங்கப்படுகிறது.  ஒரு காலத்தில் செல்வச்செழிப்பு மிக்க நகரமாக இருந்தது,  இன்றைய தேதில் சிங்கப்பூரை ஒப்பிடலாம். இன்று கடலுக்குள் மறைந்து இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நகரத்தை பற்றி இன்றும் தேடி கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கணிப்புபடி சுமார்  11000 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த நகரம் என்று கருதுகிறார்கள். அன்று சோழர்களின் தலைநகரமாகவும், பெரும் துறையாகவும் பரந்தும், விரிந்தும் இருந்ததாக சொல்லப்படுகிறது.  

 

பட்டினத்தாரின் இயற் பெயர் திருவெண்காடர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தனால் அன்பும் அறிவும் ஊட்டி வளர்த்தார் அவரது தாயார். நகரத்தாரின் குல வழக்கபடி சிவ தீக்கை(Deekshai) பெற்று, நெற்றி நிறைய திருநீற்றை பூசி, குல தொழிலையும் நன்கு கற்று  அழகும், குணமும் மிகுந்த சிவகலையை என்ற பெண்ணை மணந்து, பெரும் செல்வந்தராய், காவிரிப்பூம்பட்டினமே வணங்க தக்க மனிதராக வாழ்ந்து வந்தார். குபேர அம்சம் பெற்றதனால், அவருடைய செல்வம் அளவற்றது, உதாரணத்திற்கு, தங்கம், வெள்ளி, முத்துக்களால்  அலங்கரிக்கப்பட்ட கதவுகள், தூண்கள் நிறைந்த மாட மாளிகை கொண்ட வீடு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!. செல்வம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்று சொல்வார்கள், ஆனால் குணத்தில் தங்கம், சிவன் அடியார்களுக்கு எப்போதும் அன்னம் இடுவது, தானம் கொடுப்பது, கோயில் திருப்பணிகள் செய்வது போன்ற நகரத்தார்களுக்கே  உரிய பல அறச்செயலை செய்து வந்தார்.

 

சிறிது காலம் சென்றது, எல்லா செல்வங்கள் இருந்தும், குழந்தைச்செல்வம் ஒன்று மட்டும்   இல்லாத குறை அவர்களை மெலிதாக வாட்டியது. பக்கத்துக்கு ஊரில் ஆதிசைவர் குலத்தில் பிறந்த  சிவசருமர், சுசீலை என்கின்ற தம்பதியர் சிவ அடியார்களுக்கு அன்னம் கொடுப்பதே தொழிலாகவே கருதி தொடர்ச்சியாக செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் காசு இல்லாமல் வருந்தி, சிவனிடம் வேண்டினர். சிவபெருமான் இது தான் தக்க சமயம் என்று எண்ணி, இருவரின் பிணியை தீர்க்க, இருவரின் கனவில் தோன்றி விரைவில் வழி அமையும் என்று கூறி மறைந்தார். சருமரின் கனவில், மருதம் மரத்தின் அடியில் குழந்தை ஒன்று இருக்கும், அதை திருவெண்காடரிம் கொடுத்து வேண்டிய பொருளை பெற்று கொள்ளுமாறு அருள் புரிந்தார் சிவபெருமான். 

 

எடைக்கு எடை பொருளை கொடுத்து சிவசருமரிடம் இருந்து குழந்தையை பெற்றார் வெண்காடர். மருதீசர் அருளிச் செய்ததினால் குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.  நகரத்தார் சமூகத்தின் தத்து எடுத்தல் அல்லது சுவீகாரம் செய்யும் முறை அன்றில் இருந்து இன்று வரை இருக்கிறது.இதில் கவனிக்க வேண்டி ஒன்று, குழந்தை நகரத்தார் அல்லாத சமூகத்தில் இருந்தும்  சுவீகாரம் செய்யலாம், அதற்கு, இச்செயலே  ஒரு சான்று.

 

மருதவாணன் வளர்ந்து வயது எட்டியதும், தொழில் செய்வதற்காக  வெளிநாட்டுக்கு சென்றான். திரும்பிவரும் பொழுது, திருவென்காடார் பொன்னும் பொருளும் கொண்டு வருவான் என்று எண்ணி இருந்தார், மாறாக மூட்டை மூட்டையாக  சாணத்தால் செய்த விராட்டிகளை கொண்டு வந்தான்.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த திருவெண்காடர், மருதவாணனின் செயலை கண்டு வேதனை பட்டு தன் மகன் முட்டாளாகி விட்டானே! என மனம் கலங்கி விராட்டிகளை தூக்கி எறிந்தார். அப்போது, முத்துக்களும், பவளங்களும் விராட்டில் இருந்து தெறித்தன. இன்னும் அதிக குழப்பத்தில் வெண்காடர், மருதவாணனை காண வீட்டிற்க்கு சென்றார், அங்கும் இல்லை, எங்கு தேடியும் காணவில்லை, இறுதில்  தன் மனைவி சிவகலையிடம், மருதவாணன்தன்  ஒரு பெட்டகத்தை கொடுத்து சென்றததாக கூறினார்கள். திருவெண்காடரின் நெஞ்சு மேலும் பதபதைத்தது, பெட்டகத்தை திறந்தார், அதில் தங்க ஊசி ஒன்று பட்டு துணியில் சுற்ற பட்டு, பக்கத்தில் ஓலை ஒன்றும் இருந்தது. அவ்வோலையில், "காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்று வாசகத்தை படித்ததும், சாசுவதமாக அவர் சித்தத்திலும், நெஞ்சிலும் ஏறியது. உடனே, தன் உடையையும், கோடான கோடி செல்வத்தையும், கட்டிய மனைவியையும், பெற்று எடுத்த தாயையும்  துறந்து,   திருவெண்காட செட்டியார்  "பட்டினத்து அடிகள்" ஆனார்.  

 

தன் தாயின் இறுதி காலம் வரை அவ்வூரிலே இருந்து துறவை கடை பிடித்த பின் பல சிவ தலத்துக்குச் சென்று, பாடல்கள் பாடி, திருவிடைமருதூர் வந்தடைந்தார். அங்கு பத்ரா கிரியார்க்கு முக்தி கொடுத்த ஈசன் தனக்கு எப்பொழுது கொடுப்பாரோ என மனம் வருந்தினார். "பேய் கரும்பு என்று இன்னிக்குமோ அன்று என்னை நீ அடைவாய் " என்று மருதூர் ஈசன் அசரீரியாய் கூறியதும், அன்றில் இருந்து பேய் கரும்பை கையில் வைத்து கொண்டு பல தலங்கள் சென்று, இறுதியாக  திருவொற்றியூர் அடைந்ததும் பேய் கரும்பு இனித்தது, கடற்கரையில் இருந்த சிறுவர்களை தன்னை ஒரு குடையில் வைத்து மூடி திருக்கும்படி கூறினார், அவ்வாரே செய்த பின் தன் பூத உடல் சிவலிங்கமாக உரு எடுத்து முக்தி பெற்றார்.

 

பட்டினத்தார் வரலாற்றில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும்?  நிலையில்லாத செல்வதை பெருகுவத்திலேயே நம் வாழ்க்கையின்  பெரும் பகுதியான நேரத்தை செலவிடுகிறோம் ஆதலால் தேவைக்கு அதிகமான பொருளை சேர்த்து வைத்து கொள்ளவதினால் இந்த ஆத்மாவுக்கு எந்த பயனும் இல்லை. இதை பட்டினத்தார் பாட்டில் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம், இதுவே நமக்கு உபதேசம். 

 

ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர் செல்வ மெல்லாம்

அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், நல் அறமும் நட்பும்

நன்று என்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி

என்று என்று இரு, மனமே உனக்கே உபதேசம் இதே. - பட்டினத்தார்

 

திருச்சிற்றம்பலம்