உலகெல்லாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவனான சிவ பெருமான், தன் திருவாயால், "என் அம்மை" என்று சொல்லும் பேற்றினைப் பெற்றவர்; பிறந்த குலமான நகரத்தார்களுக்கு “செல்வம் போன்றவள்” என்று போற்றப்படுபவர்; அறுபத்து மூவரில் அனைத்து அடியார்களும் நிற்க்க, அமர்ந்த கோலத்துடன் காட்சி அளிக்கும் பெருமைக்குரிய நாயன்மார் காரைக்கால் அம்மையார்.
அழகிய காரைக்கால் நகரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நகர்த்தார்க்ளின் தலைவனாக விளங்கியவர் தனதத்தனர். அவர் தவத்தால் புனிதவதியார் (அம்மையாரின் இயற்பெயர்) பிறந்தார். சிறுவயதிலேயே சிவ பெருமானிடம் பேரன்பு கொண்டவர். கணவனே கண் கண்ட தெய்வம் என்ற போதிலும், இறைவன் மீது ஒவொருநாளும் மிக அன்பு பெருகி சிவ தொண்டினை செய்து வந்தார் புனிதவதியார்.
சிவபெருமான் கொடுத்த மாங்கனி அற்புதம் அம்மையாரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கணவன் அவரைப் பிரிந்து மறுமணம் செய்துகொண்டதை அறிந்த புனிதவதியார், தனது அழகிய உருவத்தை மாற்றி, பேய் உருவம் தாங்கி சிவபெருமானிடம் "இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும், மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாது இருக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டினார்.
இறைவர் அவருக்கு திருவாலங்காட்டில் முக்தி அளித்தார். அவர் ஆடும்போது மகிழ்ந்துபாடி அடியின்கீழ் இருக்கும் பேறு பெற்றார்.